Friday, 12 May 2017

அகக்கட்டமைப்பில் களவுஉறவைமேம்படுத்தும் தனிமனித ஆளுமைக் கூறுகள்


 
முனைவர். பா. அருண் பிரியா
முதுகலை தமிழ் ஆசிரியை
அரசு மேல்நிலைப்பள்ளி
தியாகராஜபுரம், முதலிப்பட்டி,
விருது நகர்.

முன்னுரை

                புறம்என்னும் வெளிப்படை நிகழ்வுகளான வீரம், கொடை, வலிமை, வெற்றி, புகழ் ஆகியவற்றால் உயிர்ப்பது அகம். அன்பு, காதன்மை, நட்பு, காமம் என்னும் காரணப்பெயர்களால் குறிக்கப்படுகின்ற இன்பமே அக உணர்வாகும். சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறாஅர்என்பதால், பொதுப்பெயரால் குறிக்கப்பெறும் தலைவன், தலைவி, தோழி, செவிலி, நற்றாய், பாங்கன், பாணன், அறிவன், பாகன் இவையன்னோர் அகமாந்தர்களாவர். காட்சி, ஐயம், தெளிவு, துணிவு ஆகிய நிகழ்வுகளால் தலைவனுக்கும், தலைவிக்கும் இடையில் முகிழ்க்கும் அகஉணர்வும், அவ்வுணர்வால் உந்தப்பெற்று அவர்கள் மேற்கொள்ளும் அகவாழ்வும், அவ்வாழ்வின் களவு ணிலையிள் இருபாலருக்கும் ஏற்படும் மனப்பிணக்கு, ஊடல், ஐயப்பாடு ஆகியவற்றைத் தீர்க்கும் தோழியின் ஆளுமைச் செயல்பாடும் இக்கட்டுரையின்கண் விரிவாக எடுத்தியம்பப்படுகிறது. அன்பு, பிரிவு, காதன்மை, நாணம், பொறை ஆகிய பல்வேறு தளங்களில் பயணிக்கும் உணர்வு கூறுகளும், களவுப் பொழுதுகளில் ஆளுமையாக மாறுபடும் தன்மையும் இக்கட்டுரையில் விரித்துரைக்கப்படுகிறது.
களவுசார் தனிமனித ஆளுமை
                களவுஎன்ற சொன்மை பண்டைத் தமிழரின் அக உயிர்ப்பாக இருந்திருத்தல் வேண்டும். காரணம் கற்புஎன்பது உடைமை சமுதாயத்தின் விதிமுறைக்குட்பட்ட முறைசார் பாலியலுக்குள் அடங்கும். ஆனால், ‘களவுஇனக்குழு சமுதாயத்தின் முறைசாரா மனித உயிர்ப்பு நிலை ஆகும்.
களவு, கற்பு என்பது இருவேறு மணமுறைகள். களவு, தொன்மைக்கால மணமுறையைக் குறிப்பது”1
ஆகையால், களவு அற்றைத் தமிழர் தொடங்கி இற்றைத் தமிழர் வரை உள்ள எல்லோர் வாழ்வியலுக்கும் முந்தைய நிலையும் முதன்மை நிலையும் ஆகும். களவுஎன்னும் சொல்லாட்சிக்கு பண்டைய இலக்கியங்கள் கோடல்என்பதாக பொருண்மைத் தருகின்றன. கோடல்என்பது பெண்டீர்கோடலையும், ‘நிறைகோடலையும்குறிக்கும். பெண்டீர் கோடல் என்பது அகவாழ்வின் தொடக்க நிலையாம். நிறைகோடல்என்பது புறவாழ்வின் முதல் நிலையாம். இவ்வாறு களவு அகத்திற்கு ஓர் அகமாய் இருந்ததோடல்லாமல் புறத்திற்கு புறமாயும் அமைந்தது. களவு என்ற பதத்தை இங்கு அக வாழ்வின் முதன்மை நிலை என்பதாகக் கொண்டு ஆராய்கின்ற போது தலைவனின்; ஒருதலை வேட்கைக்குப் பின் இயற்கைப் புணர்ச்சி தொடங்கி களவு வெளிப்படும் நிலை வரையுள்ள பல்வேறு சூழல்களில் அகமாந்தர்கள் வெளிப்படுத்தும் சில தனிமனித ஆளுமைகள் கீழே ஆராயப்படுகின்றன.
நாணம்
                அச்சம், மடம், நாணம் என்பனவற்றை எல்லாம் பழந்தமிழ் மகளிரின் உயிர் குணங்களாகத் தொல்காப்பியர் சுட்டுகிறார். இதற்குக் காரணம் இவ்வகையான குணங்களோடு பெண்கள் இருந்தார்களா? அல்லது இருக்க வேண்டும் என்று ஆடவர் பிரிவாலும் இலக்கியப் பெருவுள்ளம் கொண்ட புலவர்களாலும் நினைக்கப்பட்டார்களா? என்பது இன்றளவும் ஆய்விற்குரியது எனினும் இதுகாறும் சந்தித்திராத முற்றிலும் புதியதோர் ஆடவனை சந்தித்து தலைவி களவுக்கு உட்புகும் போது அவளுக்கு நாணம் ஏற்படுதல் இயல்பு. இது இயல்பு என்ற நிலையை விட உயர் குணம் என்ற நிலையை களவில் எட்டுகிறது. முத்தொள்ளாயிரத் தலைவி ஒருத்தி களவில் தனக்கு ஏற்படும் நாணத்தைக் குறித்து இவ்வாறு கூறுகிறாள்.
நாணொருபால் வாங்க நலனொருபால் உள்நெகிழ்ப்பக்
…………………………………………………………………………………………………………..
திருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத்
திரிதரும் பேருமென் நெஞ்சு!”2
இப்படி நாணத்திற்கும், நலனுக்கும் இடையில் தவிக்கும் இருதலைக்கொல்லியாய் தலைவி மாறும் நிலையே நாணத்தை உயிர்க்குணம் என்ற நிலையோடு சேர்த்து உயர்குணம் என்னும் தனிமனித ஆளுமையாகவும் மாற்றுகிறது.
குறுந்தொகை தலைவி ஒருத்தியின் இருபுறமும் மீள இயலாது தவிக்கும் இந்நாண நிலையை கீழ்க்காணும் பாடல்வரி அறியலாம்.
காணவந்து, நாணப் பெயரும்;
அளிதோ தானே காமம்;
விளிவது மன்ற, நோகோ யானே                                   (குறுந்.212:3-5)
இந்த குறுந்தொகைப் பாடல், தலைவனைக் காணத் தவிக்கும் தலைவியின் அவாவையும், காண்பதைத் தவிர்க்கும் தலைவியின் நாணத்தையும் ஒருசேரப் பதிவுசெய்கிறது. காணவந்து’, ‘நாணப்பெயரும்என்ற அடி, நாணத்தால் தன் ஆசையை மறைத்துக் கொண்ட தலைவியின் உயிர் குணத்தைச் சுட்டுகிறது. அளிதோ தானே காமம்என்ற அடி நாணம் என்ற தலைவியின் உயர்குணம் தனிமனித ஆளுமை என்பதான உயர்நிலை அடைந்தமையைச் சுட்டுகிறது.
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
தெண்கடல் அடைகரைத் தெளிமணி ஒலிப்பக்
என்ற அடிகள், தலைவன் தலைவியின் பால் கொண்ட பெருவிருப்பு தலைவனின் வருகை தலைவன் தொலைவைப் பொருட்படுத்தா நிலை வந்தும் தலைவியை காண இயலா நிலை இவை அனைத்தையும் ஒரு சேர உணர்த்துவதோடு நில்லாது இவற்றை எல்லாம் கண்டும், உணர்ந்தும் தலைவி காணாது நாணத்தால் பெயரும் நிலையை மறைமுகமாகச் சுட்டி தலைவி தன் நாணத்தை களவுக்கே உரிய தனி மனித ஆளுமையாகக் கொண்டமையை உணர்த்தி நிற்கிறது.
செவ்வியறிதல்
                களவுசார் தனிமனித ஆளுமையில் இஃது ஓர் இன்றியமையாத பண்பு ஆகும். களவில் ஈடுபட்ட தலைவன் உரிய பொழுது அறிந்து தலைவியை மணம் புரிந்து கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இதன் பொருள் ஆகும். செவ்வியறிதல் என்பது தலைவன் தன் கடமைகளை அறிதல் என்பதாகவும் தலைமக்கட் கடமைகளை தோழி அறிவுறுத்தல் என்பதாகவும் பொருள் கொள்ளலாம். பழந்தமிழ் இலக்கியங்களில் தோழியின் செவ்வியறிதலே பெரும்பான்மையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தோழி செவ்வியறிந்து அதனை அறிவுறுத்தும் பணியை வன்புறை, மென்மொழி என்ற இருநிலையிலும் மேற்கொள்வாள். தோழியால் மேற்கொள்ளப்படும் இவ்விரு நிலையும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தா வண்ணம் அமைந்துள்ளது இங்கு பாராட்டற்குரியது. காரணம்,
ஒரு சொல் வெல்லும்
ஒரு சொல் கொல்லும்என்பார்கள்.
நம் பேச்சு வெல்பவையாக இல்லாவிட்டாலும் கொல்வதாக இல்லாமல் இருந்தால் பிரச்சினைகளில் இருந்து மீண்டு விடலாம்”3
என்ற உளவியல் உண்மையை உள்வாங்கியத் தோழி தன் செவ்வியறிதல் பணியை கொல்லும் உணர்வுகள் உட்பொதிந்த வெல்லும் சொல்லாக பெரிதும் வெளிப்படுத்துகிறாள்.
காலம் இடமறிந்து கட்டுரைத்தே”4
தோழி தன் செவ்வியறிந்து, அறிவுறுத்தும் பணியை பெரிதும் நிகழ்த்துவாள். குறுந்தொகையில் களவில் நெடுநாள் ஒழுகும் ஒரு தலைவனை மணம் முயற்சிக்கும் ஈடுபடுத்த விரும்பி தோழி அறிவுறுத்தும் தலைவனின் செவ்வியை கீழ்க்காணும் பாடல் விளக்குகிறது.
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல்நாட! செவ்வியை ஆகுமதி!” (குறுந்.18:1-2)
என்ற பாடல், வேலி இல்லாத இடங்களில் உள்ள பலா மரத்தின் கனி போன்றவள் தலைவி. ஆகையால் அவளது முறையான காப்பிற்கு வழி செய்யும் வகையில் தலைவனே உன் செவ்வியை அறிந்து செயல்படுஎன்று தோழி தன் செவ்வியறிந்து தலைவனுக்கு அறிவுறுத்துவதாக இப்பாடல் அமைகிறது. இப்பாடலில் தோழி கூறும்,
யார் அஃது அறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே
என்ற அடிகளே செவ்வியறிதலின் உயிர்த் தன்மையாக விளங்குகிறது. அஃதாவது, சிறுகோடு பெரும்பழத்தைத் தாங்குவது போல் பெருங்காமத்தை தலைவியின் சிறு உயிர் தாங்குகிறது. ஆதலால் செவ்வியறிகஎன்பதாக தோழி அறிவுறுத்துவதிலிருந்து செவ்வியறியும் பண்பு தலைவியின் உயிரைக் காக்க உதவும் களவு சார் தனிமனித ஆளுமைப் பண்பாகும் என்பது விளங்குகிறது. இங்கு செவ்வியை ஆகுமதி என்னும் தொடர் தலைவனை செவ்வியறிய வற்புறுத்துகிறது. காமமோ பெரிதேஎன்னும் தொடர் தலைவன் செவ்வியறிய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது. ஆகையால் செவ்வியறிதல் என்னும் ஒரு பண்பு களவை கற்பாக மாற்றும் முயற்சி என்பதால் இஃது களவுசார் ஆளுமையின் இன்றியமையாத பண்பாகிறது.
பிரிவு அஞ்சாமைக் கூறல்
                இயற்கைப் புணர்ச்சியின் பின்னும் இதன் விளைவால் ஏற்படும் களவுச் சந்திப்புகளின் பின்னும் தலைவன் பிரிவால் தலைவிக்கு ஏற்படும் பிரிவு அச்சத்தைப் போக்குதற்பொருட்டு தலைவனால் மேற்கொள்ளப்படும் தேற்றல் மொழியே அஞ்சாமைகூறல் ஆகிறது. தலைவியின் பிரிவு அச்சத்தை உளவியல் ரீதியாக கூறுவதென்றால்,
“Fear due to Psychisituational crisis. அதாவது பிரச்சனை சார்ந்த மனோபயம்”5
எனலாம். தலைவனின் பிரிவால் தலைவிக்கு ஏற்பட உள்ள பிரச்சனை சார்ந்த அவளது மனோபயமே இங்கு பிரிவு அச்சமாகிறது.
குடும்பத்தில் இருக்கும் போது, ஆணாகட்டும் பெண்ணாகட்டும், யாரோ ஒருவரை சார்ந்து வாழும்போது, தன்னையறியாமல் நம்பிக்கையும் தைரியமும் ஒரு பாதுகாப்பும் இருப்பதை உணர்கிறார்கள். யாருக்கேனும் உடல்நலம் குன்றினால் இவர்களுக்கு கவலையும் பயமும் வந்துவிடுகிறது. எங்கு தான் நிர்கதியாக விடப்படுவோமோ என்ற அச்சம் தலை தூக்கும்”6
                சிலருக்கு தனிமையே அச்சத்தை உண்டாக்கி கொன்று விடும். பெரும்பாலும் இவை கற்பனையால் வரும் பயமாக இருக்கும். இதனை Topic fear என்பார்கள். உளவியலார் இன்று கூறும் இந்த பொதுவான அச்சங்களின் வெளிப்பாடு அன்றே பழந்தமிழர் வாழ்க்கையில் தலைவன் தலைவிக்கு இடையிலான பிரிவின் வழி பிரிவச்சமாக வெளிப்பட்டுள்ளது.
                தலைவனின் பிரிவால் தலைவிக்கு ஏற்படும் மனநடுக்கத்தைத் தவிர்க்கும் வகையில் தலைவன் கூறுவதாக அமையும் பிரிவஞ்சாமை பாடல் இது.
நீயே, ‘அஞ்சல்என்ற என் சொல்அஞ் சலையே
யானே, குறுங்கால் அன்னம் குவவுமணற் சேக்கும்
கடல்சூழ் மண்டிலம் பெறினும்,
விடல்சூ ழலன்யான் நின்னுடை நட்பே                                   (குறுந்.300:5-8)
                இப்பாடலின் இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தன்னைப் பிரியும் தலைமகன் மீண்டும் வருவானோ அல்லது தன்னை ஒத்த வேறொரு அன்பைப் பெறுவானோ என்பதாக அஞ்சும் தலைவியின் அச்சம் புனையப்பட்டுள்ளது. இவ்வச்சத்தைத் தவிர்க்க விடல்சூழலன்யான் நின்னுடை நட்பேஎன்று அஞ்சாமைக் கூறுகின்றான் தலைவன். மேலும், தலைவியின் நட்பு தலைவன் பெற்ற யாவற்றையும் விட பெரிது என்பதைக் காட்டவும் தன் பிரிவு அஞ்சாமையின் மேன்மை நிலையை விளக்கவும் கடல்சூழ் மண்டிலம் பெறினும்என்பதாக உறுதி கூறுகிறான். இவ்வாறு, தலைவன் தலைவியின் நட்பு ஒன்றையே உயர்ந்ததாகக் கருதும் தன் எண்ணத்தைக் கூறி தலைவியின் அச்சத்தை தான் அளிக்கும் நம்பிக்கையால் வெல்கிறான். ஆகையால் பிரிவு அஞ்சாமைகூறல்என்னும் நற்சான்றாண்மை களவு நிலையை மேலும் தொடரச் செய்யும் அல்லது தலைவியின் பால் தலைவன் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு சிறந்த தனிமனித ஆளுமை பண்பாகிறது.
நிறையுடைமை
                களவுசார் தனிமனித ஆளுமையில் நிறைவுடைமை என்பது மகளிர்க்குரிய தகைசால் பேரியல்பு ஆகும். இஃது ஆடவர் பாலும் இருக்க வேண்டிய இயல்பெனினும் களவில் பெண்டீர்க்குரிய இயல்பாதலினால் களவு போற்றப்படும். தலைமக்கள் சங்கமத்தின் தனி அக உணர்வுகள் வெளிப்படாமல் காப்பாற்றப்படுவது நிறைவுடைமை என்ற பண்பாலாகும். இக்காரணம் தழுவியே தொல்காப்பியர் முதற்கொண்டு பல அகப்பொருள் உரைக்கும் இலக்கண ஆசிரியர்கள் நிறையை களவுக்கும், களவில் பெண்டீர்க்கும் உரிய இயல்பாகச் சுட்டிச் செல்கின்றனர். நிறை என்பதற்கு இளம்பூரணர்,
நிறை என்பது அமைதி”7
என்பதாக வரையறுக்கிறார். பின் நச்சினார்க்கினியர்,
நிறைவும் மறைபுலப்படாமல் நிறுத்தும் உள்ளமும்”8
இவ்விரு உரைகாரர்களின் கூற்றும் நிறை என்பதற்கு மிக பொருத்தம் உடையது. அமைதியும் மறைப்புலப்படாமையும் களவில் பெண்டீர்க்கே உரிய உடைமைகளாகின்றன என்பதை,
நிறைவு எனப்படுவது மறைபிறர் அறியாமை                                  (கலி.133:12)
என்ற கலித்தொகை அடியும் புகன்று நிற்கின்றது. குறுந்தொகையில் களவிடை பிரிவில் மெலிந்த தலைவி ஒருத்தி தன் பிரிவையும் மெலிவையும் பொருட்படுத்தாமல் தன் நிறைவை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்.
நல்நாண் நீத்த பழீதீர் மாமை
வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின்,
சொல்ல திற்றா மெல்லிய லோயே!
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே,
நாள்இடைப் படாஅ நளிநீர் நீத்தத்து
இடிகரைப் பெருமரம் போல,
தீதுஇல் நிலைமை முயங்குகம் பலவே                                 (குறுந்.368:2-8)
இப்பாடலில் தலைவியின் பிரிவு வலியது. பிரிவால் மெலியும் அவளது அழகும் மெலிந்தே காக்கப்படுகிறது. எனினும், ஊரார்க்கு அவளது களவை புலப்படுத்தாமல் காக்கும் அவளது மறையே நிறையாகிறது. அதோடு தோழிக்கு அவளது பிரிவு வருத்தத்தை வெளிப்படுத்தாமல் காக்கும் அமைதியும் இங்கு நிறையாகிறது. ஆக முன்னைய உரையாசிரியர்களின் கூற்றான அமைதி, மறைவு வெளிப்படாமை இவ்விரண்டுமே இத்தலைவியின் நிறைவுடைமையாக சுட்டப்படுகிறது. மேற்கூறிய இவ்விரு பேரியல்புகளின் சங்கமமான நிறையின் அடிவேரை ஆராய்கின்ற போது,
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்”9
என்பதாக வள்ளுவர் கூறிய பொறைநிறைவுடைமைக்கு அடிவேராகி இதை களவு சார் பண்பு என்ற நிலையைத் தாண்டி களவுசார் தனிமனித ஆளுமைஎன்ற நிலைக்கு உயர்த்துகிறது.
                நிறை என்னும் பண்பை தலைவி தனிமனித ஆளுமையாய் வரித்துக் கொள்ள காரணம் ஆராய்கின்ற போது பழிக்கு நாணல்என்ற விடை புலப்படுகின்றது. அஃதாவது, தலைவி தனக்கு ஏற்படும் பழிக்கு நாணுவால் அல்லல். மாறாக தலைவனுக்கு ஏற்படும் பழிக்கு நாணும் பான்மை உடையள். ஆகவே, ஊர் உரைக்கும் பழியைத் தவிர்க்கும் பொருட்டு தலைவி தன் நிறையால் தலைவனுக்கு காப்பு அளிக்கிறாள்.
துறந்தோர் தேஎத்து இருந்து, நனிவருந்தி,
ஆர்உயிர் அழிவது ஆயினும், நேரிழை!
கரத்தல் வேண்டுமால் மற்றே, பரப்புநீர்த்
தண்ணம் துறைவன் நாண,
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே                                                        (நற்.382:5-9)
என்ற நற்றிணைப் பாடல் தலைவி பழிக்கு நாணி மறைபுலப்படுத்தாமையை சுட்டி நிற்கின்றது. இப்பாடலில், ‘நண்ணார் தூற்றும் பழிதான் உண்டேஎன்ற அடி தலைவி, தலைவனின் பழிக்கு தான் நாணும் தன்மைக் குறிக்கிறது. ஆர்உயிர் அழிவது ஆயினும், கரத்தல் வேண்டுமால் மற்றேஎன்ற இருதொடர்களும் மறை புலப்படுத்தாமைக்குத் தலைவி மேற்கொள்ளும் வலிய முயற்சியைக் குறிக்கிறது. ஆருயிர் அழிவது ஆயினும்என்னும் தொடரே களவுக்கு நிறை எத்துணை இன்றியமையாதது என்பதை மிகவும் ஆழமாக எடுத்துரைக்கிறது. ஆக ஊரார் பழி களவு உறவை சிதைக்கும். ஆனால் தலைவியின் நிறையோ ஊரார் பழியை முழுமையாய்த் தவிர்க்கும். இதன் காரணம் கொண்டே மறைப்புலப்படுத்தா நிறை பெண்டீர்க்கே உரிய பேரியல்பாகவும், தனிமனித ஆளுமையாகவும் அமைகிறது.
காதன்மை, ஏதின்மை
                காதன்மையும், ஏதின்மையும் களவு என்னும் அகஉணர்வால் பீடிக்கப்பட்ட தலைமகளுக்கு இயல்பாக அமைய வேண்டிய இன்றியமையாப் பண்பாகும். ஈண்டு காதன்மை என்பது தலைவனோடு தலைவி அக உணர்வால் ஒன்றுபட்டு ஒழுகுதல். ஏதின்மை என்பது மறைப்புலப்படுத்தாமல் தன் இல்லின்கண் தலைவன் விருந்தாய் வரும் போது பாராமுகத்தலாகி ஏதின்மைக் காட்டி தாயருக்குப் நற்புதல்வியாய் ஒழுகுதல். இவ்விரு உணர்வும் ஒன்றோடொன்று சங்கமிக்கா வண்ணம் தலைவி ஒருத்தி மிகுந்த அறிவு நுட்பத்தோடு விளங்குவதை தலைவன் ஒருவன் பெருமிதமாய் வெளிப்படுத்தும் பாடல் இது,
இரண்டுஅறி கள்விநம் காத லோளே;
முரண்கொள் துப்பின் செவ்வேல் மலையன்
முள்ளூர்க் கானம் நாற வந்து,
நள்ளென் கங்குல் நம்ஓ ரன்னள்,
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச்
சாந்துஉளர் நறுங்கதுப்பு எண்ணெய் நீவி,
அமரா முகத்தள் ஆகித்
தமர்ஓ ரன்னள் வைகறை யானே                                                 (குறுந்.312:1-8)
இப்பாடலில், தலைவனோடு இருக்கும் பொழுது தலைவி உணர்வு ஒன்றுபட்ட நிலையையும், இல்லின்கண் இருக்கும் போது வேற்று உணர்வுடைய நிலையையும் காண முடிகிறது. இம்முரண்பட்ட நிலை முரண்கொள் துப்பின்என்பதாய் உணர்த்தப்படுகிறது.
முள்ளூர்க் கானம் நாற வந்து
நள்ளென் கங்குல் நம்ஓ ரன்னள்
இந்த அடிகள் தலைவனைக் காண வரும் தலைவி கங்குல் பொழுதுகளைப் பொருட்படுத்தாமல் தலைவனோடு உணர்வு ஒன்றிக்கிடப்பாள் என்று தலைவியின் பெரும் காதன்மைச் சிறப்பை வெளிப்படுத்துகிறது.
அமரா முகத்தாள் ஆகித்
தமர்ஓ ரன்னள் வைகறை யானே
இந்த அடிகளோ, தலைவனை இல்லின்கண் விருந்தாய் காணும் தலைவி அவனை இதுவரை காணாததாகவும் இப்போதுதான் முதல் முறை காண்பதாகவும் வெளிப்படுத்திக் கொள்ளும் அவளது ஏதின்மையைச் சுட்டி நிற்கிறது. தலைவியின் அவ் ஏதின்மைக் குறித்தும் அவள் காதன்மைக் குறித்தும் தலைவன் பெருமிதம் தொணிக்க, ‘இரண்டு அறி கள்விநம் காதலோளேஎன்று உரைப்பதன் வழி இவ்விரு பண்புகளும் களவுக்கு எத்துணை மேன்மையுடையவை என்பது புலனாகும். களவின்பொருட்டு மேன்மையுடைய இவ்விரு பண்புகளையும், தலைவியின் தகைசால் ஆளுமை பண்புகளாகவும் கருதலாம்.
சாயல்
                சாயல்என்ற பதம் இன்று உருவ ஒற்றுமையை உணர்த்தும் சொல்லாகவே பெரும்பான்மையும் வழக்கில் உள்ளது. ஆனால், சாயல் என்ற தனித்தமிழ்ச்சொல் உணர்வுக்கும் உறவுக்கும் இடையிலான ஒரு மெல்லிய  ஆளுமைச் சொல்லாக தொகைநூல்களில் பயின்று வருகிறது.
சாயலாவது ஐம்பொறியால் நுகரும் மென்மை”10
என்ற நச்சரின் கூற்று, சாயல் என்னும் சொல் அக உணர்வில் அதிலும் களவில் ஒரு மிகச்சிறந்த ஆளுமைப் பண்பாக பயன்பட்டுள்ளதற்கு சான்று பகர்கிறது.
                களவில் தலைவனும் தலைவியும் உணர்வும் உறவும் ஒருமிக்க பழகுதல் முறைமை ஆகும். அங்ஙனம் பழகுதற்கு இயலாமல் தலைவிக்கு சில ஐயப்பாடுகளும் சில வகையான அச்சங்களும் இடைநிற்கும். அவ் அச்சங்களையும், ஐயங்களையும் மிக மென்மையான முறையில் அகற்ற பயன்படுவது தலைவனின் சாயல்என்னும் மென்மைப் பண்பாகும்.
நின்புரைத் தக்க சாயலன்………”                                                             (அகம்.332:10)
என்ற இவ்அகப்பாடலில், தலைவனின் நற்பண்புகளை எடுத்துரைக்கும் தோழி அப்பண்புகளில் ஒன்றான மென்மையை மிகுத்து உரைக்கிறாள். அதிலும், ‘நின்புரைத் தக்கஎன்ற தொடரே தலைவியின் ஐயப்பாடுகளை நீக்கி தலைவனோடு களவில் உடன்படுத்தும் தொடராகிறது. இங்கு தலைவனின் சாயல் என்பது இயல்பெனினும் தலைவியின் குணங்களையும் அவளது இயல்புகளையும், அவள் பழகும் முறைமைகளையும் புரிந்து கொண்ட தலைவன் அவற்கேற்றாற்போல் தன் சாயலை மாற்றிக் கொள்ளும் மென்மையே இங்கு மேன்மையாகி களவுசார் தனிமனித ஆளுமை என்ற இடத்தில் நிலைபெறுகிறது.
தலைநாள் விருப்பம்
                தலைநாள் விருப்பம் என்பது களவு உறவை மென்மேலும் வலிமைப்படுத்தும் ஒரு ஆற்றல்சார் ஆளுமைக் கூறாகிறது. ஒரு உறவு ஏற்படுவது பெரிதன்று அவ்வுறவு நற்கூறுகளாலும் நல்லியல்புகளாலும் மென்மேலும் வலிமைப்படுவதே அவ்வுறவுக்கு தக வினைத் தரும். தலைவனின் தலைநாள் விருப்பமும் தலைமக்கட் களவுக்கு மேதகைமையைத் தரும் ஒரு ஆளுமைக் கூறாகிறது.
வண்டுஇடைப் படாஅ முயக்கமும்,
தண்டாக் காதலும் தலைநாள் போன்மே!” (அகம்.332:14-15)
என்ற பாடல், களவின் தலை வாயிலான இயற்கைப் புணர்ச்சித் தொடங்கி பின் நிகழ்ந்த எல்லா குறியிடச் சந்திப்புகளிலும் தலைவனின் விருப்பம் தலைநாள் விருப்பத்தைப் போன்று இருந்தது என்பதை வெளிப்படையாக எடுத்துரைக்கிறது. விருப்பம் என்பது விரும்பிய பொருளையும் உறவையும் கைகூடச் செய்யும் உணர்வுசார் கருவியாகும். இங்கு தலைவனின் தலைநாள் விருப்பம் தலைமக்களின் களவை மேலும் வலுப்படச் செய்யும் ஒரு சிறந்த ஆளுமைக் கருவியாக விளங்கியதை மேற்காணும் கூற்றின் வழி அறிய முடிகிறது.
பொருள்வயிற் பிரியாமைக்கு நாணல்
                பொருள்வயிற் பிரியாமைக்கு நாணும் தன்மை களவை கற்பாக மாற்றும் முயற்சியின் முதல்நிலை ஆகும். தலைவனின் இந்த நாணம் இல்லையெனில் களவு கற்பாக மாற்றமுறாமல் களவாகவே தொடரும் தன்மையதாகிவிடும். தலைவன் களவில் ஏன் பொருள்வயிற் பிரிதல் வேண்டும்? எனில் தன் வாழ்க்கையை தொடங்குவதற்குரிய பொருளை தானே ஈட்டும் வழக்கம் உடையவன்.
மணங்கொள்ளுமுன் பெற்றோரது ஆதரவின்கீழ் வாழ்ந்த மகன், உரிய பருவம் வந்ததும் தன் மனத்திற் இனிய மங்கையை மணந்து வாழ விரும்புகின்றான். அவன் தான் விரும்பிய மங்கையை மணம் செய்து கொள்ளுதற்குரிய பொருளைப் பெற்றோரிடம் வேண்டிப் பெறுவதில்லை. தனது திருமணத்தை முன்னிட்டுப் பொருளீட்டக் கருதிய அவன், வேற்று நாடு செல்வது வழக்கம்”11
என்ற க.வெள்ளைவாரணரின் ஆய்வு உரை தலைவன் பொருள்வயிற் பிரிதலைப் பற்றிய காரணம் புகர்வதாக அமைகிறது. களவில் நீண்ட காலம் ஈடுபட்ட தலைவன் ஒருவன் களவை கற்பாக மாற்றும் முயற்சிக்கு வேண்டி பொருள்வயிற் பிரியாமைக்கு நாணம் கொண்டு பிரிந்ததாய் கீழ்க்காணும் பாடல் அமைகிறது.
தோள்புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு 
நாள்பல நீடிய கரந்துஉறை புணர்ச்சி
நாண்உடை மையின் நீங்கிச் சேய்நாட்டு
அரும்பொருள் வலித்த நெஞ்சமோடு ஏகி” (அகம்.187:1-4)
இப்பாடல், களவில் ஈடுபட்ட தலைவன் நாண்கொண்டு பொருள் வயிற்பிரிந்ததாகச் சுட்டி நிற்கிறது. அரும்பொருள் வலித்த நெஞ்சம்;’ என்ற தொடர் ஆடவரின் பொதுவான இயல்பைச் சுட்டுகிறது. ஆனால், நாணுடைமையின் நீங்கி என்ற தொடர் ஆடவரின் பொதுவான இயல்புக்கு அப்பாற்பட்டு தலைவன் தன் செயலுக்கு நாணுவதாகவும் அந்நாணத்தின் மேலீட்டால் பொருள்வயிற் பிரிந்ததாகவும் இங்கு இயம்பப்பட்டுள்ளதால் தலைவனின் நாணுடைமை செயலுக்கு நாணல் என்ற நிலையையும் தாண்டி வரைவுக்கு உட்படுத்தும் செயல்பாட்டுக் கருவியான தனிமனித ஆளுமை ஆகிறது.
முறையும் நிறையும்
                வரைவுக்குட்படாமல் நீடிக்கும் களவை கற்பாக மாற்ற தோழி மேற்கொள்ளும் முயற்சி இது. முறையும் நிறையும் என்பது முறையே களவை கற்பாக மாற்ற தலைவன் செய்ய வேண்டிய முறைகளும் அம்முறைமையால் தலைவிக்கு ஏற்படும் நிறைவுமே ஆகும்.
                களவில் வந்தொழுகும் ஒரு தலைவனிடம் தோழி அவனது முறை பற்றியும் அதனால் தலைவிக்கும் தனக்கும் ஏற்படும் நிறை பற்றியும் கூறுவதாய் அமையும் பாடல் இது.
கழியக் காதலர் ஆயினும், சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்;
வரையின் எவனோ? வான்தோய் வெற்ப!
கணக்கலை இகுக்கும் கறிஇவர் சிலம்பின்
மணப்பு அருங் காமம் புணர்ந்தமை அறியார்,
தொன்றுஇயல் மரபின் மன்றல் அயர,
பெண்கோள் ஒழுக்கம் கண்கொள நோக்கி,
நொதுமல் விருந்தினம் போல, இவள்
புதுநாண் ஒடுக்கமும் காண்குவம், யாமே                                            (அகம்.112:11-19)
என்ற இப்பாடல், தலைவனை வரைவுக்கு உட்படுத்தும் தோழியின் மிகச் சிறந்த ஆளுமைத் திறனுக்குச் சான்றாகும்.
கழியக் காதலர் ஆயினும், சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்
என்ற தொடர் தலைவனின் காதல் மிகுதியைக் காட்டிலும் சான்றாண்மையின் முறைமையைச் சுட்டுகிறது. மணப்பு அருங்காமம் புணர்ந்தமை அறியார்என்ற அடி தோழி தவிர வேறு ஒருவரும் அறியாத களவின் முறைமையைச்சுட்டுகிறது. மன்றல் அயரஎன்ற வழி கற்பின் முறைமையும் நொதுமல் விருந்தினம் போலஎன்ற வழி இல்லற முறைமையும் பெண்கோள் ஒழுக்கம் கண்கொள நோக்கிஎன்ற வழி தலைவியின் மணநிறைவால் தோழிக்கு ஏற்பட்ட மனநிறைவும் விரித்துரைக்கப்படுகிறது. ஆக, களவிலும் கற்பிலும் தலைவன் தான் செய்ய வேண்டிய முறைமைகளைச் செய்து இம்மையில் தலைவிக்கும் தோழிக்கும் நிறைவை அளிப்பதே தலைவனின் கடன் என்று தலைமகனின் களவுசார் ஆளுமை முறைமையை தோழி விளக்குகிறாள்.
எளிமை
                எளிமை என்னும் பண்பு எக்காலத்திலும் எல்லோரையும் ஈர்க்கும் ஒரு ஆளுமைப் பண்பு. எக்காலத்தும் எல்லோருக்கும் வேண்டிய ஒரு ஆளுமைப் பண்பாகும். பழந்தமிழ் இலக்கியங்களில் தலைவன் தலைவியரின் குணச்சிறப்புத் தவிர அழகுநலம், ஆபரணங்கள், ஆடைகள், போர் முறைகள், வாழ்க்கை முறை, செல்வச்செழிப்பு, அன்புக்கு கூறப்பட்ட உவமை இவை அனைத்தையும் இலக்கியமாய் இயற்ற கவிஞருக்கு கைகொடுத்த கற்பணை இவையனைத்தும் ஒரு வகையில் இலக்கிய ஆடம்பரங்களே. அவ் ஆடம்பரங்களுள் எளிமை என்னும் ஒரு பண்பு மேற்கூறப்பட்ட அனைத்து முறைமைகளுக்கும் தலைமை சான்றாய் அமைகிறது. செலவின் எளிமை சிக்கணம் தரும். கற்பனையின் எளிமை எதார்த்தம் தரும். அதுபோலத்தான் அக அன்பின் எளிமை களவின் வாயிலாகவும், பழகு முறைக்கு முதல்நிலையாகவும் அமைந்திருக்கிறது. இவ் எளிமைத்தன்மையே தலைமகளை பெரும்பான்மையும் ஈர்த்ததாக இலக்கியத்தில் சொல்லப்படுகிறது. தலைவனின் பழகு முறையின் எளிமையை குறிக்கும் வகையில் அமைந்த பாடல் இது.
கடுந்தேர் இளையரொடு நீக்கி, நின்ற
நெடுந்தகை நீர்மையை அன்றி, நீயும்,
தொழுதகு மெய்யை அழிவுமுந் துறுத்துப்                                           (அகம்.310:1-3)
என்ற பாடல் தலைவன்பால் அமைந்த அருமையினும் எளிமையைச்சுட்டுகிறது. தலைவன் கடுந்தேர் உடையன், நெடுந்தகை, தொழுதகு மெய்யன் எனினும் நீர்மையன்என்றவழி தலைவன்பால் அமைந்த பல அரிய பண்புகளிலும் நீர்மை மேலோங்கி நிற்கிறது. இப்படியொரு தலைவன் செயல்வழி நீர்மையை வெளிப்படுத்த மற்றொரு தலைவன் சொல்லின் வழி எளிமையனாகின்றான்.
நெருநல் எல்லை ஏனல் தோன்றித்,
திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து,
புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள,
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றிச்” (அகம்.32:1-4)
பலரைப் புறக்கும், செல்வமும் உடைமையும் கொண்ட தலைவன் தலைவியின் காரணமாய் பழகும் முறையில் எளிமைப் புகுத்தி இரவல் மொழி பேசுகின்றான். இவ்வாறு, பண்பினும் செல்வத்தினும் மேம்பட்ட தலைமகன் தலைமகளின் அன்பை பெரும்பொருட்டு எளியராவது அகவுணர்வைத் தூண்டும் வாயிலாக மட்டும் அல்லாமல் தலைமகனின் ஆளுமைப் பண்பாகவும் திகழ்கிறது.
நிறைவுரை.
                களவுசார் தனிமனித ஆளுமை என்ற பொருண்மையில் மேற்படிக் கூறப்பட்ட களவின் வாயிலான நாணம், பிரிவச்சம் தவிர்க்கும் அஞ்சாமை, முறைமையின்நின்று ஒழுகும் செவ்வியறிதல், மறைபுலப்படுத்தா நிறையுடைமை, பழகும் முறையை இனிமைபடுத்தும் சாயல், எளிமை, உணர்வு ஒன்றுபட்ட காதன்மை, அமரா நோக்கம் கொண்ட ஏதின்மை வரைவுக்கு உட்படுத்தும் முறைமை ஆகிய அனைத்துமே களவு உறவை நிலைப்படுத்தி முறைப்படுத்தி வழிப்படுத்தும் ஆற்றல் கொண்ட மிகச்சிறந்த தனிமனித ஆளுமை பண்பாகிறது.

அடிக்குறிப்புகள்
1.            செல்வராசு சிலம்பு நா., பண்டைத் தமிழர் திருமண வாழ்க்கை, ப.10
2.            மாணிக்க வாசகன்.ஞா ( உ.ஆ) முத்தொள்ளாயிரம், பா.எ.29
3.            ஜெயப்பிரியா, தீர்வுகள், ப.எ.68
4.            இளவழகனார். தி.சு. (உ.ஆ.) நீதிவெண்பா, பா.எ.34
5.            சந்திரசேகர்.எஸ்., ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ளுவது எப்படி?, ப.43
6.            மேலது., ப.44
7.            இளம்பூரணர் (உ.ஆ), மு.நூ. ப.324
8.            நச்சினார்க்கினியர் (உ.ஆ), தொல்காப்பியம், ப.528
9.            திருக்குறள், பொறையுடைமை, கு.எ.154
10.          நச்சினார்க்கினியர், மு.நூ.546
11.          வெள்ளைவாரணன்.க., சங்ககாலத் தமிழ்மக்கள், ப.79


No comments:

Post a Comment