பா.அருண்பிரியா,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
மதுரைகாமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை.
மகடூஉ சிறப்பு விதிகளின் உரை
வேறுபாடுகள் (தொல்காப்பியம்)
முகவுரை
தமிழ் கூறும் நல்லுலகில் பழமையும் வளமையும் வாய்ந்த பல
இலக்கியங்களும் அவ்விலக்கியங்களுக்கு செம்மையும் தொன்மையும் நிறைந்த பல இலக்கண
வரம்புகளும் பாடபேதமற்று முழுமையாக இன்றளவும் காணக்கிடக்கின்றன. அவ்வாறு கிடைக்கப்
பெற்ற பெருங்களஞ்சியத்தில் தமிழின் தலையான நிலையான இலக்கணமாகவும் தமிழரின்
வாழ்வியல் பெருநிதியமாகவும் விளங்கிய ஒரே ஒரு இலக்கண நூல் தொல்காப்பியம் என்றால்
அஃது மழையினும் தூய உண்மை. ஏறக்குறைய 17 நூற்றாண்டுகள்
ஏடாலும் செவிச் செல்வத்தாலும், நெட்டுருவாலும் பாதுகாக்கப்பட்டு பல
தலைமுறை இடைவெளிகளைத் தாண்டி வந்த தொல்காப்பியச் சாகரத்தை இளம்பூரணர் என்னும்
உரையாளரின் சிந்தைக் கவர்ந்து, நுகர்ந்து, பருகி பல உரை மணிகளை பிரசவித்தது அதைத்தொடர்ந்து வந்த இன்னும் பல
உரையாசிரியர்கள் இளம்பூரணரின் உரை மணிகளை கண்ணார் கண்டும் செவியால் உண்டும்
இன்னும் சில உரைகளை பிரசவித்தனர். இங்ஙனம் வெளியான உரைகளுள் இளம்பூரணம், நச்சினார்க்கினியம் என்ற இரு உரைகளின் வழியே தொல்காப்பியர் சுட்டிய
மகடூஉச் சிறப்பு விதிகளின் ஒப்புமை, கருத்து
வேறுபாடுகள் ஆகியவற்றை நுனுகி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
உரையும் நிறையும்
பழன்தமிழ் பேரிலக்கியங்கள் பலவும் பனை ஓலை வழியாகவும் பழந்தமிழர்
மூளை வழியாயும் தவழ்ந்து நடந்து வளர்ந்தது. அதோடு பண்டைய முறையில் கல்வி பயின்றோர்
யாருக்கும் உரைத் தேவை என்ற எண்ணம் எழவில்லை அதற்குக் காரணம் “உரைக்கப் படும்பொருள் உள்ளத்து அமைத்து” என்று உணர்த்தப்பட்ட நெட்டுறுப்பழக்கமும் “கட்டில னாயினும் கேட்க” என்று
உரைக்கப்பட்ட கேள்வி இன்பமும் “உரையின்றி சூத்திரத்தானும் பொருள்
நிகழ்ந்த காலமும் உண்டு” என்று இயம்பப்பட்ட வாய்மொழிச்
செல்வாக்குமே ஆகும். இங்ஙனம் உரையின்றி வளர்ந்த தமிழ் மொழியின் நூல்களில் களவியல்
இலக்கணத்திற்கு உரைச் செய்தார். நக்கீரர் அதன்பின் தொல்காப்பியத்திற்கு உரைமணி
பொலியக் கோர்த்த புலமையோன் இளம்பூரணர் ஆவார். இவர்கட்கு பிற்சார்பாக பல உரையாசிரியர்களும்
எழுந்து துணிந்து உரை செய்து முறை செய்து இன்றளவும் தமிழ் இலக்கண இலக்கியங்களுக்கு
நிறை செய்கின்றார்கள்.
உரைகாரர் இருவர்
தொல்காப்பியம் முழுமைக்குமே உரைகண்ட உரை வள்ளார்கள் நச்சினார்க்கினியர்,
இளம்பூரணரே தொல்காப்பியத்திற்கு முதலில் உரை கண்டவர் உரையாசிரியர் என்னும் சிறப்பு
பெயரும் உரை முதல்வர் என்னும் காரணப் பெயரும் கொண்டவர். பெயர் சூட்டா மரபும்
போலிக் கொள்கை மறுப்பும் கல்விச் செருக்கின்மையும் இவரது தனித்தன்மை மேலும்
“ஆரவாரமும் பகட்டும் இவர் உரையில்
எங்கும் காண்பது அரிது பிறர் கருத்தை மதித்தலும் புலமை முதிர்ச்சியும்
நடுநிலைமையும் உரை முழுதும் வெளிப்படுகின்றன”
என்ற இவர் பற்றிய பேராசிரியர் மோகனின்
கருத்து ஏற்கத் தகுந்தது. அடுத்தாற்போல் நச்சினார்க்கினியாரின் உரையை திறனாய்வு
அளவுகோல் கொண்டு அளவிடின் அதில் கல்விப் பெருமிதம் எழில்கோள் இலக்கிய நயம்
நெஞ்சில் பதியும் மேற்கோள் ஆகியன இவரின் தனித்தன்மைகளாகும் மேலும்
“நச்சினார்க்கினியரின் உரைகளில் அவருடைய
கடலனையை கல்வியும், செம்மையான பொருள் கூறும் திறனும்
வாதாடும் ஆற்றலும், தெளிந்த தமிழ் ஆர்வமும் நன்றாய் விளங்குகின்றன”
என்று உரை மரபு கூறும் விளக்கம்
நச்சினார்க்கினியரின் உரைத் திறனுக்கான மதிப்பீடாகும். இவ்விருவரின் உரையையும்
நன்குஆய்ந்த பின் “தமிழ் மரபை அடியொட்டியது இளம்பூரணர்
உரை” என்பதான முடிவுக்கு வரலாம் என்கிறார்
மு.வை.அரவிந்தன் மகடூஉ சிறப்பு விதிகளுக்கான இவ்விருவரது உரை திறனையும்
வேறுபாடுகளையும் கீழே காணலாம்.
கற்புக் கிளவிக்கு சிறப்பு விதி
தமிழர் அக வாழ்வில் விதிகட்குட்பட்ட பெருஞ்சிறப்பு நிலைக் கற்பு.
இக்கற்பு நிலையில் பெண்டிற்கான சிறப்பு விதி
“தற்புகழ் கிளவி கிழவன்முற் கிளத்த
லெத்திறத் தானுங் கிழத்திக் கில்லை
முற்பட வகுத்த விரண்டலங் கடையே”
(தொல்.பொருள்.1124)
என்பதாகும். இவ்விதிக்கு தலைவி தன்னை புகழ்ந்துரைக்கும் உரிமை
தலைவனின் முன்னிலையில் அவளுக்கு இல்லை என்ற அளவில் இளம்பூரணரும் நச்சரும் உரை
வேறுபடவில்லை இறுதி அடியில் உள்ள இரண்டலங்கடையே என்ற பதத்திற்கு இளம்பூரணர்
“தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்த வழி
இரத்தலும் தெளித்தலும் என அகத்திணையியலுட் கூறிய இரண்டும்” (தொல்.பொருள்.இளம்.309)
என்பதாக உரை வகுக்கிறார். அஃதாவது
பரத்தையர் பிரிந்துழி இரத்தல் தெளித்தல் நிகழ்ந்துரையும் தற்புகழ் கிளவி தலைவிக்கு
உரியது என்கிறார். இஃது இலக்கணத் தொடர்ச்சிக்கும் தமிழரின் அகமரபிற்கும்
பொருந்துவதாக அமைகிறது. ஆனால் நச்சினார்க்கினியாரே இரத்தலுற் தெளித்தலும்
“காமக்கிழத்தியரும் அவர்க்குப்
பாங்காயினாருங் கேட்பப் புகழ்தலாம்” (தொல்.பொருள்.நச்.515)
என்ற பரத்தையர் அனைவரையும் சுட்டாமல்
கிழத்திக்கு இணையான உரிமை பூண்ட காமக்கிழத்தியரை மட்டும் சுட்டி நிற்கும் இவரது
உரை வேறுபாடு சிந்திக்கற்பாலது.
மகடூஉ உரிமைக்கு சிறப்பு விதி
களவினும் கற்பினும் அடங்கிய மகளிர் வாழ்க்கையில் அவர்களுக்கான
உரிமைக் குறித்த சிறப்பு விதி இது,
“உடம்பும் உயிரும் வாடியக் கண்ணும்
என்னுற் றனகொல் இவையெனின் அல்லதைக்
கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை”
(தொல்.பொருள்.1147)
இவ்விதிக்கு இளம்பூரணரின் உரை
“உடம்பும் உயிரும் மெலிந்த இடத்தும் இவை
என்னுற்றன எனக் கூறினல்லது, கிழவோன் உள்வழிப் படர்தல் கிழத்திக்கு
இல்லை” (தொல்.இளம்.321)
என்பதாக ஆய்வுக் கண்ணோட்டம் இன்றி விதிவிலக்கும் முறையில் அமைகிறது.
ஆனால் நச்சரின் உரையோ
“தன் உடம்பும் உயிருந் தேய்ந்து
கூட்டமின்றி இருந்த காலத்தும் இவை என்ன வருத்த முற்றன கொலென்று தனக்கு
வருத்தமில்லது போலக் கூறினல்லது தலைவிக்குத் தலைவனைத்தானே சென்று சேர்தல் இருவகைக்
கைக்கோளிலுமில்லை காதல் கூரவுங்கணவற் சேராது வஞ்சம்போன் நொழுகலின் வழுவாயினும்
அமைக்க”
என்ற தனது உரைவழி கிழத்திக்கான
இவ்வுரிமை கைக்கோள் இருவகையிலும் இல்லை என்று ஐயம்மர உணர்த்தியும் வஞ்சனையால் என்ற
பதத்தால் ஆய்வுலகிற்கு திசைகாட்டியும் அமைகிறது. இஃது இளம்பூரணருடன் வேறுபட்ட கருத்துடமையாயினும்
கற்போரின் ஐயம்மரக் கலைவதால் சிறந்த உரையாகவே கருதப்படும்.
பெண்டிர் இயல்புக்கான சிறப்பு விதி
அச்சம், மடம், ஞானம் தவிர்த்த சில சிறப்பு குணங்கள் பெண்டிற்கு இயல்பென்று
விளக்கும் விதி இது,
“செறிவு நிறைவுஞ் செம்மையுஞ் செப்பு
மறிவு மருமையும் பெண்பா லான்” (தொல்.நச்.1153)
தொல்காப்பியர் சுட்டிய விதிக்கு செறிவு – அடக்கம், செம்மை – மனங்கோடாமை, அறிவு – நன்மை பயப்பனவுந் தீமை பயப்பனவும் அருமை – உள்ளக் கருத்திலருமை என்ற இந்நான்கு பதங்களுக்கு கூறப்பட்ட 4 உரைகளிலும் இருவரின் கருத்தும் ஒருமித்து அமைகிறது ஆனால் நிறைவு,
செப்பு இவையிரண்டிற்கும் முறையே இளம்பூரணரின்
கருத்து “அமைதி, சொல்லுதல்” (தொல்.இளம்.321) என்பதாக அமைகிறது. ஆனால் இதற்கு மாறாக நச்சரின் கருத்தில் நிறைவு –
மறைபுலப்படாமல் நிறுத்தும் உள்ளமும், செப்பும் களவின்கட் செய்யத்தகுவன கூறலும்” (தொல்.நச்.528) என்பதாக அமைகிறது. இங்கு இளம்பூரணர்
உரை விதிக்குப் பொதுவாகவும் சிறப்பியல்புகளை விளக்கும் வண்ணமும் அமைகிறது. ஆனால்
நச்சரின் உரையோ களவுக்கு சிறப்பிடம் வகுத்து பெண்டிர்க்கான சிறப்பியல்பை களவுக்
காலத்து மட்டும் வெளிப்படுகின்ற குணங்களாக கருதி உரை வகுத்துள்ளார். இஃது
முன்னவரோடு கருத்து வேறுபட்டிருந்தாலும் களவுக்கா, கற்புக்கா என்ற வினாவிற்கு விடை சொல்வதால் இவரது உரைத்திறன்
மதிக்கற்பாலது.
புறப்பிரிவுகளுக்குச் சிறப்பு விதி
ஓதல், பகை, காவல், தூது துணைவயின், பொருள்வயின் என்று சொல்லப்பட்ட அகம், புறப்பிரிவுகளுக்குள் இஃது புறத்திற்கான சிறப்பு விதி “எண்ணரும் பாசறைப் பெண்ணோடும் புணரார்” (தொல்.பொருள்.இளம்.173) இவ்விதிக்கான
உரையாசிரியரின் உரை “மாற்றாரை வெல்லுங் கருத்து
மேற்கோடலிற்றலை மகளிரை நினைக்கலாகாதாயிற்று பாசறை என விசேடித்தவதனான் ஏனைப்
பிரிவுக்குமாமென்று கொள்க” (தொல்.பொருள்.இளம்.306) இவ்வுரையின்படி தலைமகன் தலைமகளோடு பாசறையிடத்து மட்டுமின்றி வேறு
எந்த புறப்பிரிவுகளிலுமே புணரான் என்று உரைத்த இளம்பூரணரின் உரை இவ்விதிக்கு மிக
நுட்பமான விளக்கத்தை தருகிறது. பின் நச்சரின் உரையோ “எய்தியது விலக்கிற்று முந்நீர் வழக்கம் என்பதனாற் பகைதணி வினைக்குங்
காவலற்குக் கடும்பொடு சேறலா மென்று எய்தியதனை விலக்கலின்” (தொல்.பொருள்.நச்.514) என்பதான இவரது உரை இளம்பூரணரின்
உரைக்கு உரையானதோடு மட்டுமல்லாமல் முந்நீர் வழக்கம் என்ற பதத்தில் உள்ள
முந்நீருக்கு இந்த மூன்று பிரிவுகளையும் இணைத்து முதலில் கலத்தில் சேரல் என்ற
அகப்பிரிவிற்கும் பின் ஈண்டு புறப்பிரிவுகளான மூன்றிற்கு ஒரு நுட்பமான உரை
முடிச்சுட்டு ஆய்வாளர்களின் ஆய்வுத் திறனுக்கு வித்திடுகிறார்.
மடற் குறித்த சிறப்பு விதி
தலைமகள் மாட்டு, காமம் மிகுந்துளி தலைமகன் மடலேறும்
வழக்கம் உண்டு. அவ்வழக்கிற்கான சிறப்பு விதி,
“எத்திணை மருங்கினு மகடூஉ மடன்மேற்
பொற்புடை நெறிமை யின்மை யான” (தொல்.பொருள்.979)
இவ்விதிக்கான உரை முதல்வரின் விளக்கம் “கைக்கிளை பெருந்திணைக்கு உரிய இயல்பு உணர்த்துதல் நுதலிற்று எல்லாக்
குலத்தினிடத்தினும் பெண்பால் மடலேறுதல் இல்லை. இஃது பொலிவுபெறு நெறிமை இல்லாமையான்”
(தொல்.இளம்.35) இவ்வுரையில் காமம் மிகுந்துளி என்ற ஒரு காரணத்திற்காக மடலை
கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் உரித்தாக்கியமையும் எத்திணை மருங்கினும் என்ற
பதத்திற்கு எக்குலத்திலும் என்ற பொருள் கண்டமையும் இவரது மிக நுண்ணிய
உரைத்திறனுக்கு சான்றாய் அமைகிறது. ஆனால், நச்சர் உரையிலோ “கைக்கிளை முதல் பெருந்திணையிறுவாய் ஏழன் கண்ணும் தலைவி மடலேறினாளெனக்
கூறும் புலனெறி வழக்கம் பொலிவுடமையின்று ஆதலான் அது கூறப்படாது” (தொல்.நச்.290) என்ற கூற்றின் வழி மடல் எழுதிணைக்கும்
உரியது என்று அன்புடைக் காமத்தையும் மடலுக்கு உட்படுத்துகிறார். இவரது இக்கூற்று
அகமரபோடு சற்று பொருந்தியும் மிகுதி விலகியும் செல்கிறது.
முடிவுரை
உரையாசிரியர், உரை முதல்வர் என்ற புகழாரங்களுக்கு
உரிய இளம்பூரணர் மகடூஉச் சிறப்பு விதிகளின் மடல் கூற்றுக்கும் பெண்டிர்
சிறப்பியல்புக்கும் உரைவகுத்தக்காலை சில இடங்களில் நுட்பமாகவும் சில இடங்களில் அக
மரபினின்று வேறுபட்டும் உரை வகுத்துள்ளார். உரைஞாயிரான நச்சினார்க்கினியரோ
இளம்பூரணரிடம் ஒரு சமயம் வேறுபட்டும் வேறோரு சமயம் ஒன்றுபட்டும் உரைவகுத்துள்ளார்.
முன்னவரோடு கருத்து வேற்றுமை கொண்ட போதிலும் அகமரபினின்று அகலாமலும் வடமரபைத்
திணிக்காமலும் விதிகளை ஆய்வுக்குட்படுத்தியும் விதிகளை ஒன்றோடொன்று
தொடர்புபடுத்தியும் உரை வகுத்துள்ளார். இவ்விருவரின் உரையையும், மிகுதியும் படித்து அதனினும் மிகுதியாய் ஆய்ந்து இவரது உரைத்திறனை அநுபவித்தல்
தமிழ் இலக்கிய ஆய்வாளர்க்கு இன்பம் பயக்கும்.
பயன்படுத்தப்பட்ட நூல்கள்
1. இளம்பூரணர் (உ.ஆ) தொல்காப்பியம் பொருளதிகாரம்
2. நச்சினார்க்கினியர் (உ.ஆ) தொல்காப்பியம் மூலமும் உரையும்
3. பேராசிரியர் (உ.ஆ) தொல்காப்பியம் பொருளதிகாரம்
4. சோம.இளவரசு (உ.ஆ) நன்னூல் எழுத்ததிகாரம்
5. பரிமேழலகர் (உ.ஆ) திருக்குறள்
6. மு.வை.அரவிந்தன், உரையாசிரியர்கள்
7. இரா.மோகன் உரை மரபுகள்
No comments:
Post a Comment