Saturday, 30 May 2015

சங்க இலக்கிய பரத்தையர் வாழ்வியற் சிக்கலில் ஆளுமை நிலைப்பாடு



சங்க இலக்கிய பரத்தையர் வாழ்வியற் சிக்கலில் ஆளுமை நிலைப்பாடு

பா.அருண் பிரியா
முனைவர் பட்ட ஆய்வாளர்,
மதுரை காமராசர் பல்கலைக் கழகம்,
மதுரை.

முகவுரை
                சங்ககாலத் தமிழர்கள் மிக உயரிய ஒழுக்க நியதிகளுடன் கூடிய வாழ்க்கை முறையை மேற்கொண்டனர் என்ற கருத்தோடும், சங்ககாலம் ஒரு பொற்காலம் என்ற கருத்தோடும் உடன்பட விரும்பாதோர் பால் வேறுபாடு கருதாது கள்ளுண்டு கழித்த நிலையையும், பரத்தையர் பிரிவையும்தேவையற்ற புனைந்துரைகளையும் முரண்படிகளாகச் சுட்டுவர்.
இங்ஙனம் உரைக்கப்பட்ட இம்முரண்களில் பரத்தையர் பிரிவே பெரிதும் விரித்துரைக்கப்பட்டு விவாதிக்கப்படுவது.
மருதத்திணையின் உரிப்பொருளுக்கு உரிய பொருளான பரத்தையரே, தலைவன், தலைவியின் வாழ்வியல் சிக்கலாவர்.
ஆனால், பரத்தையரின் வாழ்வியல் சிக்கலை ஆயுங்கால் அச்சிக்கலின் இருமுனையும் தலைவனும், தலைவியும் ஆகின்றார்.
சற்றேறக்குறைய ஒரு அகவாழ்க்கை சங்கிலி போல் அமையும் இம்மூவருள் பரத்தையரின் வாழ்வியல் சிக்கலிலுள்ள ஆளுமை நிலைப்பாட்டை அவர்களது உணர்வுகள், மனவெழுச்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் சங்க அகக்கிளைகளான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு மற்றும் அகப்புறக் கிளையான பரிபாடல் ஆகிய நூல்கள் வழி ஆய்ந்து உரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

ஆய்வுச்சிக்கள்.
                மருதத் திணையின் ஊடலும் ஊடல் நிமித்தமும் என்பதான உரிப்பொருளுக்கே மிகுதியும், கருவியாக பரத்தையின் வாழ்வியல் அமைகின்றது. பரத்தமை என்ற தொழிலை மட்டும் வைத்துக் கொண்டு ஆய்வாளர்கள் பரத்தையைக் கொடும்;பரத்தை என்பதாகவும், தலைவன் தலைவியின் வாழ்வியல் சிக்கலாகவும் ஆய்ந்து வருகின்றனர். அதிலிருந்து வேறுபட்டு பரத்தையருக்கும், தலைவிக்கு ஒத்ததான அமைந்துள்ள சில குணங்கள் அமைகின்றதா? என்ற வினாவே இவ்வாய்வுக் கட்டுரையின் சிக்கலாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.    

சங்ககால பரத்தையரின் வாழ்வியல் சிக்கல்
                பழந்தமிழரின் வாழ்க்கைப் பின்னணியையும் அதை ஏற்று அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையையும் ஆய்ந்து நோக்கின் பரத்தையர் பிரிவு என்பது அக்காலத்து சமூகத் தேவையாக இருந்திருக்க வேண்டும்.
ஏனெனில், பரத்தையர் பால் தலைவன் செல்வதைக்கூட சங்க இலக்கியம் பரத்தையர் ஒழுக்கம்என்பதாகவே பதிவு செய்கிறது.
இதைப் பற்றி தொல்காப்பியர், பூப்பின்  புறப்பா டீராறு நாளு
நீத்தகன் றுறையா ரென்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலை யான்”1
                ஆயினும், இவ்வொழுக்கம் குறித்து தொல்காப்பியர் மிகுதியான குறிப்புகளை வழங்கவில்லை என்பது ஆச்சர்யம்.
இதேக் கருத்தை அகத்திணையியலில் பிரிவு பற்றிப் பேசாது ஓதல், பகை, தூது, பொருள் காரணமான பிரிவுகள் பற்றிப் பேசிய தொல்காப்பியர் கற்பியலில் மட்டுமே பரத்தையர் பிரிவைப் பேசியுள்ளார் ”2 என்று பெ.மாதையன் உறுதி செய்கிறார்.
தொல்காப்பியத்தோடு காலத்தால் பிற்பட்ட நூலான நம்பியகப்பொருள் விளக்கம்பரத்தையர் பிரிவு பற்றி,
இல்வாழ்க்கையே பரத்தையர் பிரிவே”3
                என்று பரத்தையர் ஒழுக்கத்தை உறுதிபடுத்திவிட்டு பின்,
வாயில் வேண்டல், வாயில் மறுத்தல்,
வாயில் நேர்வித்தல், வாயில் நேர்தல் என்று
ஆய பரத்தையின் அகற்சி நால் வகைத்தே”4
                என்பதாக இவ்வொழுக்கம் பற்றிய நெடியதொரு விரி அளிக்கிறது.
ஆக பழந்தமிழர் சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்புறத்தொழுக்கம் மருதம்என்ற ஒரு திணையின் உயிரோட்டமாகவும், உட்பொருளாகவும் காணக்கிடைக்கின்றது.
பரத்தையர் பற்றிய மிகுதியாக குறிப்பைத் தருகின்ற மருதத்திணை இவர்களை சேரிப்பரத்தையர், காமக்கணிகையர் என்பதாக குறிக்கிறது.
இவர்கள் தனியொரு தலைவனோடு தனித்த வாழ்க்கைப் புரிவதில்லை.
பரத்தையரில் மேலும் ஒரு வகை காதற்பரத்தையர்.
இவர்கள், தனியொரு தலைவனோடு மணம் புரிந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலைவன், தலைவியின் வாழ்வியல்; சிக்கலாக சித்திரிக்கப்படும் பரத்தையரின் வாழ்க்கையிலும் தலைவனை பிரிந்ததன் அடையாளங்கள் இடம் பெறுகின்றன.
பரத்தமை என்ற தொழிலுக்கு அப்பாற்பட்டு இவர்கள் அடையும் மனவுணர்வில் சில ஆளுமைக் கூறுகள் வெளிப்படுகின்றன.

பரத்தையரின் உள்நோக்கு ஆளுமை
                இத்தன்மையை அகவயம்அல்லது அகநோக்குஎன்ற சொல்லால் குறிப்பிடலாம்.
புற உலக நிகழ்ச்சிகளில் ஈடுபடாமல் எப்போதும் தம்மைப் பற்றிய சிந்தனை, கற்பனை, நினைவுகள் கொண்டவர்கள். சிறு தோல்வியையும் தாங்கிக்கொள்ளும் மனப்பான்மை அற்றவர்களாக இருப்பார்கள்”5 என்று எஸ்.சந்தானம் கருத்துரைக்கிறார்.
இத்தன்மைக்கிணங்கவே சில பரத்தையரின் செயல்கள் பதிவு செய்யப்படுகின்றன.
அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
நயந்தோர் உண்கண் பயந்து, பனிமல்க
வல்லன் வல்லன் பொய்த்தல்” (ஐங்குறுநூறு பா.எ.37)
                இந்த பாடல் அடிகள் என் கண்கள் அழுமாறு செய்து பிரிந்த பொய்யன் என்பதாக வெளிப்படும் பரத்தையின் கூற்றி; பிறர் நலம் பற்றிய குறிப்பாக தலைவியின் நலம் பற்றிய எண்ணவோட்டம் இல்லாமல் தன்னைப் பற்றி சிந்தனையுடன் கூடிய தன்னலம் வெளிப்படுதலால் இஃது உள்நோக்கு முறையாகக் கொள்ளப்படுகிறது.
பரத்தையின் இந்த உள்நோக்கு முறைக்கு காரணம் தலைவனின் பிரிவு பற்றிய வருத்தம் அன்றி வேறில்லை.
                மற்றொரு தலைவனின் பிரிவாற்றாமையைத் தவிக்கும் இன்னொரு பரத்தை தன்நிலையை இங்ஙனம் விவரிக்கிறார்.
தண்தளிர் வெளவும் மேனி,
ஒண்தொடி முன்கை, யாம் அழப் பிரிந்தே” (ஐங்குறுநூறு பா.எ.38)
                அஃதாவது பரத்தையின் உடல்மெலியும் படியாகவும், கைவளை கழலும் படியாகவும் பிரிந்த தலைவனை, உடைமைப் பொருளாக எண்ணுகின்ற அவளது கூற்று உள்நோக்கின்பார்படும்.
இவ்விரண்டு கூற்றிலும் முறையாக உள்நோக்கு உள்ள ஆளுமையும், தலைவனின் பிரிவாற்றாமையை உரைக்கும் உடல் உள்நோக்கு ஆளுமையும் ஈண்டு புலப்படா நிற்கிறது.

காதற்பரத்தையரின் வெளிநோக்கு ஆளுமை
                வெளிநோக்கு ஆளுமையை புறவயத்தன்மை என்ற ஆளுமைக் கலைச் சொல்லால் குறிப்பர்.
உளவியல் அறிஞர்கள் இவர்கள் நட்புக் கொள்வதை அதிகம் விரும்புவராக இருக்கிறார்கள்.
பிறரிடம் காணும் குற்றங்களைக் கண்டு கொள்ளாமலும் ஒளிவு மறைவு இல்லாமலும் இருப்பார்கள்.
மேலும் இத்தன்மை பற்றி, “புறவயப்பட்டவனோ தன்னாய்வுத்திறன் ஒளிவு மறைவு இல்லாமை, பிறர்காணும் குற்றங்களைப் பொருட்படுத்தாமை போன்ற இயல்புகளைப் பெற்றிருப்பான்”6 என்பதாக சான்று பகர்கிறது வாழ்வியற்களஞ்சியம்.
பொய்பழகூட்டும் மாயப்பரத்தை என்பதாக மிகுதியும் கருத்துரைக்கப்படுகின்ற பரத்தையரின் பால் இந்த வெளிநோக்குத்தன்மை மிகுதியும் ஆழங்கால் பட்டுள்ளது என்பதை,
அம்ம வாழி பாண! எவ்வைக்கு
எவன்பெரிது அறிக்கும் என்ப பழனத்து
வண்டு தாது உளதும் ஊரன்
பெண்டுஎன விரும்பின்று அவள்தன் பண்பே” (ஐங்குறுநூறு பா.எ.89)
                என்ற இவ்வடிகள் உறுதிப்படுத்துகின்றன.
அஃதாவது தலைவனிடம் பேரன்பு கொண்ட காதற்பரத்தை ஒருத்தி தன் நலம் நயவாமல் தலைவியின் நலனின் பால் பேரன்பு கொண்டு அவளது பண்பைப் புகழ்வது ஈண்டு வெளிநோக்கு என்ற ஆளுமையின் பாற்படும்.
பின்முறை வதுபைக்கு உரிய ஒருத்தி காதற்பரத்தைத் தலைவன் பால் அன்பு கொண்ட தலைவியைப் புகழ்தல் என்பது பெரிதும் விரித்துரைக்கக் கூடிய சிறந்த ஆளுமைப் பண்பாகும்.

பரத்தையருள் இருநோக்காளர்
                அகவயம், புறவயம் என்ற இரு தன்மையும் கலந்தோரை இவ்வாளுமையின் பாற்படுவர் இக்கருத்தை பெரும்பாலான உளவியலாளர்கள் மறுத்துரைத்தாலும் பல்வேறு ஆளுமைப் பண்பின் கூறுகள் பல்வேறு விதத்தில் ஒவ்வொரு மனிதனிடத்திடனும் புதைந்துள்ளன என்ற காட்டர் கூற்றயே இன்றைய உளவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்”17 என்பதாக கருத்து பரிமாற்றம் செய்கிறார் எஸ்.சுந்தரசீனிவாசன்.
இலக்கியத்தின் பால் இவ்வணுகுமுறையை புகுத்தினால் அஃது ஒரு உடன்பாடு, மறுப்பு, இவ்விரண்டும் கலந்த குணங்கள் கொண்ட ஆளுமை என்று பொருள்படும்.
இக்கருத்து உட்பொதிந்த நிலையில் ஒரு பரத்தை சுட்டப்படுவதை,
தண்துறை ஊரனை எவ்வகை எம்வயின்
வருதல் வேண்டுதும் என்பது
ஒல்லேம் போல்யாம் அதுவேன் டுதுமே” (ஐங்குறுநூறு பா.எ.67)
                என்ற சங்க அடிகள் மொழிந்து நிற்கின்றன.
இப்பரத்தையின் கூற்றின் படி புறத்தொழுக்கத்து பிரிந்த தலைவனின் துணைவி பரத்தையின்பால் வர விரும்புகிறாள்.
இவ்வரவை வெளிப்படையாக மறுத்து உள்ளூர விரும்புகிறாள் பரத்தை இவ்வுட்கருத்தே பரத்தையின் இருநோக்கு ஆளுமைத் தன்மையை முன்மொழிந்து நிற்கிறது.
பரத்தமை என்ற தொழிலாள் இவள் கீழ்மகளாக கருதப்படினும் தலைவன்பால் கொண்ட அன்பாலும், தலைவியின்பால் கொண்ட உடன்பாட்டு எண்ணத்தாலும் தலைவியை விட மேலான இடத்தை பெறுகிறாள் பரத்தை.

கருத்து திரிபு ஆளுமை
                சிறு சிறு ஐயங்களும் முரண்பட்ட மன உணர்வுகளும் கொண்டவரே கருத்து திரிபு ஆளுமையாளர்.
இந்த வகை ஆளுமையினரிடம் உளநோயாளிகளைப் போல் திரிபுணர்வுகளோ மனநோய் அறிகுறிகளோ காணப்படுவதில்லை.
ஆனால் இவர்களிடம் பரவலான ஒரு சந்தேக மனப்பான்மையும் மற்றவர்களிடம் நம்பிக்கையின்மையும் அதிக அளவில் காணப்படுகின்றன.
மேலும், இது குறித்து கருத்து திரிபு ஆளுமையினர் சிறு செயல்களில் மிகுந்த கவனம் செலுத்துவர் மற்றவர்கள் தம்மீது குற்றம் கண்டுபிடிப்பதை வெறுப்பார்கள் மிகுந்த மன வேதனைகளையும் துன்பங்களையும் அனுபவிப்பர் என்று விளக்கம் அலிக்கின்றனர் உளவியலாளர்கள்.
இவ்வுட்பொருளின் ஆளுமைக் கூறு தொணிக்கும் படி நற்றிணையில்,
எம்நயந்து உனறவி ஆயின் யாம் நயந்து
நல்கினம் விட்டது என்? நலத்தோன் அவ்வயின்
சால்பின் அறித்தல் அறியாது? அவட்கு அவள்
காதலள் என்னுமோ? உரைத்திசின் தோழி! (நற். பா.177)
                என்ற தொகை அடிகள் இயம்புகின்றன.
நெடுநாள் பரத்தையரிடம் இருந்த தலைவனை தலைவியின்பால் அனுப்பிய பிறகு அப்பரத்தை தோழியிடம் தன் எண்ண ஒட்டங்களை இப்படி உரைக்கிறாள்.
தலைவியிடம் அன்பு கொண்டு தலைவனை விடுத்த யான் மிக்க அன்பு கொண்டவள் என்று தலைவி கருதுவாளோ அல்லது பழி தூற்றுவாளோ என்ற இக்கணிகையது கூற்றில் அவளது முரண்பட்ட மன ஓட்டங்களும் அன்பு மிகுதியும், ஐயமும் பொதிந்த கருத்து திரிபு ஆளுமை புலனாய்கிறது.
இவ்வாளுமையின் படி இப்பரத்தை தலைவன் தலைவியின் வாழ்வியல் சிக்கலையும் ஊடலையும் மிகுவிக்க விரும்பாத உயர்ந்த மனப்பான்மையும் வெளிப்படுகிறது.

பரத்தையின் சொன்மைத் திறன்
                சொல்லால் மனிதன் செய்கின்ற ஆளுமை ஜாலங்கள் இப்பிரிவின்கண் அடங்கும்.
இச்சொன்மைத் திறன் குறித்து எளிய சொற்கள், கருத்தாழம் மிக்கதாய் அமைதல் வேண்டும்.
பொருள்வரிசை முறையில் அமைந்தும் வழக்காறு வழி இருத்தல் வேண்டும்”8 என்பதாக கருத்துரைக்கிறார் இரா.சுப்புராயலு
வைகையில் நீராட போன்த தலைவி ஒருத்தி தன் அணிகலனை ஒரு பரத்தையின் பால் கண்டு அவளைப் பலர் நாணப் பழித்துரைக்கிறாள்.
அதற்கு வெகுண்டு பரத்தை இங்ஙனம் கூறுகிறாள்.
மாலை அணிய விலைதந்தான் மாதர்நன்
கால்சிலம்பும் கழற்றுவான் சால
அதிரல் அம் கண்ணி நீ அன்பன் எற்கு அன்பன்
கதுவாய் அவன்கள்வன் கள்விறான் அல்லேன்” (பரிபாடல் பா.எ.30)
                என்ற அடிகளில் தன்னைப் பழித்த தலைவியை நோக்கி என்னிடம் பெற்ற இன்பத்திற்கு விலையாகத் தலைவன் இவ்வணியை தந்தான்
ஆக என்னைக் கள்வி என்று உரைப்பதை விடுத்து துன் கணவனை கள்வன் என்று உரை.
இக்கூற்றின் வழி பரத்தையின் சொல் ஆளுமைத் திறனும்
அவ்வாளுமையின் வழி அக்காலத்தைய அச்சமுதாயத்தால் புறத்தொழுக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையும்,
பலர் நாண வாழும் பரத்தையின் மனம் கூட பழி நாண விரும்பாமையும் இங்கு அறியலாகிறது.

பரத்தை மதி உடன்பாடு
                ஆய்வு உலகத்தால் மிகுதியும் கொடும்பரத்தை என்பதாக அறியப்படும் இவர்பால் மதியுணரும் திறனும் நுன்மாண் நுலை புலமும் மிகுதியாகக் காணப்பட்டது.
ஒரு மனிதனின் செயல் அடிப்படையில் அவனது உள்ளக்கிடக்கைகளை கணக்கிடலாம் என்ற உளவியலாளரின் இன்றையக் கருத்தை அன்றைய சேரிப்பரத்தையரின் கூற்று நினைவுபடுத்துகிறது.
மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண்டன கொல்?
வண்டின் மாண்குணம் மகிழ்நன்கொண்டான் கொல்?”
                தலைவி, பரத்தையாற் பால் பழகாலும் இன்பம் துய்க்கின்றான் தலைவன்.
அத்தலைவனின் குணத்தை வண்டு பெற்றதோ இல்லை வண்டின் குணம் தலைவனுக்கு அமையப் பெற்றானோ என்ற இப்பரத்தையின் கூற்று வழி அவளது நுன்மதியும் அதன் வழி இரு பாலரிடத்தும் இன்பம் துய்க்கும் தலைவனின் வண்டு குணத்திற்குக் காரணம் கற்பிக்க இயலாது தலைவியும், தானும் வருந்தும் நிலையும் இவ்விடத்து புலனாய்கிறது.

நிறைவுரை
                சங்கத் தமிழ்ப் பாடல்கள் முழுவதையும் ஆராய்கின்ற நிலையில்
29 வகையிலான கூற்று வரிப்பாடலுக்கு உரியப் பொருள் பரத்தையர்.
அவர்கள் மேற்கொண்ட பரத்தமை சங்க சமுதாயத்தால் புறத்தொழுக்கம் என்ற நிலையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஊடலுக்கு உரிப்பொருளான அத்தன்மையோர் பரத்தமை என்ற நிலையிலிருந்து நழுவி,
அக உணர்வால் பீடிக்கப்பட்டனர்.
ஆகையாலேதான் தலைவன் மேல் கொண்ட உடைமை உணர்வால் அத்தகையோருக்கு உள்நோக்கு ஆளுமை பெரும்பான்மையும் இருந்தது.
இவ்வாளுமையைத் தவிர வெளிநோக்கு, இருநோக்கு, கருத்து திரிபு ஆளுமைக் கொள்கை ஆகிய அளவுகோலின் வழி ஆய்ந்து
அளவிடின் கிழத்தியைப் போல் பரத்தைக்கும் தலைவன் பிரிவால் உடல் மெலிதல்,
கைவளை கழறல், பசலை பூத்தல் ஆகிய அக அடையாளச் சின்னங்கள் வெளிப்பட்டன என்பதையும்,
கிழத்தியைப் போல பரத்தையின் பழிக்கு நாணும் தன்மையுடையள் என்பதையும்,
தோழி போல பரத்தை மதி நுட்பத்திறன் கொண்டவள் என்பதையும்,
பலவகை உணர்வு வெளிப்பாட்டாலும் ஆளுமைத் திறனாலும் பரத்தை தலைவிக்கும் தோழிக்கும் இணையல் என்பதையும் இக்கட்டுரையின் வழி அறிய முடிகிறது.

அடிக்குறிப்புகள்
1.            தொல்காப்பியம், நச்சினார்க்கினியர், நூ.எ.1131
2.            மாதையன்.பெ, அகத்தினைக்கோட்பாடும் சங்க அகக்கவிதை மரபும், ப.81
3.            நம்பி அகப்பொருள் விளக்கம், நூ.எ.201
4.            மேலது., நூ.எ.204
5.            சந்தானம்.எஸ்., கல்வியின் உளவியல் அடிப்படைகள், ப.163
6.            வாழ்வியற்களஞ்சியம், தொகுதி-2, ப.681
7.            ஆளுமைமேம்பாடு.எஸ்., சுந்தரசீனிவாசன், ப.14
8.            தகவல் மேலாண்மை, இரா.சுப்பராயலு, ப.88

குறுந்தொகை குறிஞ்சி மாந்தரின் மனம்சார் பதிவுகள்



பா.அருண் பிரியா
முனைவர் பட்ட ஆய்வாளர்
மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்,
மதுரை.

குறுந்தொகை குறிஞ்சி மாந்தரின் மனம்சார் பதிவுகள்

முகவுரை
                ஒரு மனிதனின் இன்ப துன்பங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது மனம். இது உணர்ச்சிகளின் பிறப்பிடமாகத் திகழ்வதுடன் அனைத்து செயல்களுக்கும் வழிகாட்டியாகவும் திகழ்கிறது. இம்மனம் உள்ள இனத்தையே மனித இனம் என்கிறோம். மனம் வலிமையுடையதாக இருக்கும் தன்மையைப் பொருத்தே மனித வாழ்க்கை அமையும். மனம் உணர்ச்சிகளாலானது. அதற்கு வடிவம் கிடையாது. வடிவமற்ற இம்மனமே ஆசை, சீற்றம், அன்பு, காமம், அருள் இவையன்ன அகவயம், புறவயப்பட்ட உணர்வுகளின் இருப்பிடமாகத் திகழ்கிறது. இவ்வுணர்ச்சிக்கு அப்பாற்பட்டதும் அதைவிட மேம்பட்டதுமான அறிவின் உறைவிடமும் மனமே. சமூக ஆதிக்கம், மரபு, சூழ்நிலை பண்பாட்டு உணர்வு ஆகியவற்றின் காரணமாக நம்மால் அமிழ்த்தப்பட்டும் பாலியல் வேட்கைசார் உணர்ச்சிகள் அழுந்திக்கிடப்பதும் இம்மனத்துள்ளேதான் இத்தகைய மனத்தின் முரண்பட்ட சில உணர்வுகளை எட்டுத் தொகையின் அகக்கிளைகளுள் ஒன்றான குறுந்தொகைஎன்னும் களத்தில் ஐந்திணை பகுப்புகளுள் ஒன்றான குறிஞ்சியின் அகமாந்தர் வழிஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
குறிஞ்சி கட்டமைப்பு
                ஒழுக்கம், குடி, கருமம் என்பன போன்ற பொருண்மைகளை விளக்குவது திணை. அதில் முதன்மையானது குறிஞ்சி. குறிஞ்சி புணர்தலும் புணர்தல் நிமித்தமும் எனக் கூறினாலும், மனத்திற்கு முற்பட்ட நிலையைக் கூறுவதே ஆகும். எனவே திருமணத்திற்கு முன்னைய களவு ஒழுக்கத்தைக் குறிஞ்சி என்றும் திருமணத்திற்குப் பின்னைய பிரிவு (பாலை) இருத்தல் (முல்லை), இரங்கல் (நெய்தல்), ஊடல் (மருதம்) ஆகிய இவற்றை கற்பு என்று கொள்ள வேண்டும். சங்க இலக்கியத்தில் முல்லைத்திணைப் பாடல்களிலும் நெய்தல் திணைப்பாடல்களில் களவு ஒழுக்கம் பேசப்படினும் குறிஞ்சித்திணைப் பாடல்ளில் களவு ஒழுக்கம் அருகிய நிலையிலேயே பேசப்படுகிறது. உரிப்பொருளை அடிப்படையாகக் கொண்ட இக்குறிஞ்சியின் கூற்றுகளாக இயற்கைப் புணர்ச்சி, வரைவுகடாதல், அறத்தொடு நிற்றல், மடலேறுவேன் எனல், கையுறை மறுத்தல், இடந்தலைப்பாடு, இரவுக்குறி, பகற்குறி நேர்தல் (ம) மறுத்தல், செறிப்பறிவுறுத்தல், வெறிவிலக்குதல் என்ற பொருண்மை பற்றிய கூற்றுகளே இடம் பெற்றுள்ளன” (அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக் கவிதை மரபும் ப.எண் - 86) என்பதாக பெ.மாதையன் சான்று உரைக்கிறார். இந்த திணைக்கட்டமைப்பின் பின்னணியிலேயே இக்கட்டுரை அமைகிறது.
மனித மனம்
                மனித மனம் மிகவும் விசித்திரமான போக்கை உடையது. அதனால் தான் மனிதன் ஏனைய விலங்குகளிலின்றும் மாறுபட்டுப் பகுத்தறிவுச் சிந்தனையோடு செயலாற்றுகின்றான். நினைவாற்றல் மனிதனுக்குக் கிடைத்த பெரும் பேறாகும் நினைவாற்றலின் துணை கொண்டே மனம் செயல்படுகிறது. மனம்பற்றி அறிஞர்களிடம் மாறுபட்ட கொள்கைகள் காணப்படுகின்றன. மனித மனத்தை நனவு மனம், நனவிலி மனம்என இரண்டு வகைப்படுத்தலாம். மனிதனுடைய செயற்பாடுகள் பெரும்பான்மையும் நனவிலி மனத்தால் இயக்கப்படுகின்றன. குறுந்தொகை குறிஞ்சிப்பாக்களில் மனத்தைக் குறிக்க நெஞ்சம்’, ‘உள்ளம்ஆகிய சொற்கள் பயின்று வருகின்றன. மேலும் இக்குறிஞ்சி அடிகளில் தேவை, வேண்டல், உணர்வெழுச்சி, துடிப்பு, செயல், இன்பம், வேட்கை, விசை, உந்தல், விழைவு, முனைப்புஎன்பதாக சிக்மண்ட் ஃபிராய்டு கூறும் துய்ப்பு மனத்தின் கூறுகளே அதிகமாக காணக்கிடைக்கின்றன.
மடல் குறித்து இரு வேறு மனநிலைகள்
                தலைவன் பலகாலும் தோழியையும், தலைவியையும், குறிப்பால் நயந்தும் அவன் விரும்பிய காமம் கிடைக்கப் பெறதாலின் அவன் மடல்ஏறத் துணிகிறான். மடன்மா கூறும் இடனுமார் உண்டேஎன்பதன் வழி தலைவன் காம வேட்கையின் மிகுதியினால் மடலேறும் வழக்கம் உண்டு என்பதாம். ஆயினும் தொல்காப்பியர் ஏறிய மடற்றிறம் என்று மடல் ஏறுதலை பெருந்திணையில் குறிக்கிறார்குறுந்தொகையில் ஒரு தலைவியின் விருப்பமின்மையால் தலைவன் மடல் ஏறத் துணியுங்கால் இங்ஙனம் உரைக்கிறார். ஆவாரம் பூக்களைச் சேர்த்துக் கட்டிய மாலையணிந்த பனங்கருக்கால் செய்யப்பட்ட குதிரையின் மேல் ஏறி, என் காமம் மிகுதியை ஊராருக்கு உரைக்க விழைகிறேன் எனது அச்செய்கை கண்டு ஊரார் தலைவியை பழி தூற்றட்டும் என்பதை,
பல்நூல் மாலைப் பனைபடு கலிமாப்
பூண்மணி கறங்க ஏறி, நாண் அட்டு,
பழிபடர் உள்நோய் வழிவழி சிறப்ப,
இன்னாள் செய்தது இது என முன்நின்று
அவள் பழி நுவலும், இவ்வூர்
                என்கின்ற இத்தலைவன் கூற்று புலப்படுத்துகிறது. இதே அக உணர்வால் பிடிக்கப்பட்ட இன்னொரு தலைவன் மடலேறும் போது அமிழ்தினும் இனிய சொற்களை உடைய தலைவியை யான் பெறுவேன். இந்த நல்ல பெண்ணின் கணவன் இவன்என்று பலரும் கூறக் கேட்டு, “நான் வெட்கப்படுவேன்என்ற பொருள்பட,
பெறுகதில் அம்ம, யானே! பெற்றாங்கு
அறிகதில் அம்ம, இவ்ஊரே! மறுகில்,
நல்லோள் கணவன் இவன் எனப்
பல்லோர் கூறயா அம் நாணுகம் சிறிதே” (குறு – 14)
                என்கிறது. இன்னொரு தலைவனின் கூற்று இவ்விரண்டையும் ஒருங்கே எண்ணி நோக்கும் கால் தலைவியை ஊர் பழிதூற்றினும் மிகையில்லை. தலைவியின்பால் தனக்கு உள்ள காமவேட்கையைத் தீர்த்துக் கொள்ளுதலே இன்பம் என்கிறது. ஒரு தலைவனின் மடற்கூற்று மிக நல்ல தலைவியைப் பெற்ற எம்மையும், அவளையும் வாழ்த்தட்டும் ஊர் என்று கிழத்திக்கும் புகழ் சேர்ப்பதாக அமைகிறது என்கிறது. இன்னொரு மடற்கூற்று அகம் என்ற ஒரே உணர்வும் மடல் என்ற ஒரே துறையும் புலப்படுத்தும் இவ்விருவேறு மன உணர்வும் முறையே சிக்மெண்ட் ஃபிராய்டு அவர்கள் உரைத்த வேட்கை, வேண்டுதல் இவ்விரண்டு நிலைகளோடும் ஒருங்கெண்ணத் துணியும் தன்மையது.

காமம் குறித்த இருவேறு மனநிலைகள்
                குறுந்தொகை குறிஞ்சிப்பாக்களின் காதல் உணர்வை குறிக்க பெரும்பான்மையாக காமம்என்ற சொல்லே பயின்று வருகிறது. இச்சொல் பெரும்பான்மையும் காதல் அன்பைக் காட்டிலும் காம உணர்வையே சுட்டி நிற்கிறது. இதன் காரணம் குறிஞ்சியின் உரிப்பொருளான புணர்தலும் புணர்தல் நிமித்தமும் என்பதாகவும் இருக்கலாம் குறிஞ்சிப்பாக்களில் காமம் மேல் இட்ட இரு தலைவியரின் உணர்வுகள் தட்டப்படுகின்றன.
இன்ப உணர்வு
                உலக உயிர்கள் அனைத்திற்கும் உரிமையுடையது இந்த இன்ப உணர்வு. இது மிகுதியான மன நிறைவின் வழி வெளிப்படுவது. இதனைத் தொல்காப்பியர்,
எல்லா வுயிர்க்கு மின்ப மென்பது
தாமைர்ந்து வரூஉ மேவற் றாகும்” (தொல் பொருள் - 1167)
                என்பதாக சான்று பகர்கிறார். தலைவி விரும்பிய தலைவன் அவளை மனம் பேச வருகின்றான் என்பதைத் தாய்க்கூறக் கேட்ட தலைவி இன்பத்தில் ஆழ்ந்து நம் அன்னை பெறுதற்கரிய தேவலோக அமிழ்தந்தை உணவாகப் பெறுவாளாக புகழுடைய துறக்க உலக இன்பத்தையும் பெறுவாளாக என்று வாய்மடுப்பதை,
அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்
பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை” (குறு – 83)
                என்று குறிஞ்சி அடி கூற நிற்கிறது. இஃது தலைவி பெற்ற அதீ இன்ப உணர்வினால் தன் அன்னையை இயன்றவாதெல்லாம் வாழ்த்துகிறான். இஃது சிக்மண்ட் ஃபிராய்டின் இன்பம் விளைதல் என்ற துய்க்கும் மனநிலையோடு ஒருங்கு வைத்து எண்ணலாம்.
துன்ப உணர்வு
                தமிழர் எஞ்ஞான்றும் இன்பம் அன்றி வேறு துய்க்கக் கூடாது என்று தொல்காப்பியர் கருத்தினாற்போலும் இன்பத்திற்கு என்று தனியே விதிவகுத்தவர் துன்பத்தைச் சுட்டவில்லை ஆயினும் மெய்ப்பாட்டில் வரும் ஆளுமை, இளிவரல் ஆகிய இரண்டும் துன்பத்தின் சில நிலைகளை விளக்க நிற்கிறது துன்ப உணர்வு பற்றி உளவியலார் மனிதன் தன் ஆசை கொண்டது நிறைவேறாத போது ஏற்படுகின்றன நிலை என்று விளக்கமறிக்கின்றன. ஒரு தலைவன்பால் காம வேட்கை மிகுந்த தலைவி தாயினால் அவ்வேட்கை தடைப்பட்ட ஞான்று தலைவி இங்ஙனம் கூறுகிறால் காவல் மரத்தின்று உதிர்ந்து ஆற்றில் அடித்து வந்த அலகு ஒரு மாங்காயை சுவைத்த குற்றத்திற்காக அப்பெண்ணை நன்னன் என்ற குறுநில மன்னன் கொன்றான் அச்செயலால் அவன் நாகம் அடைவான் அத்தகைய நரகத்தை என் அன்னையும் அடைவாளாக என்பதை விளக்க,
பெண் கொலை புரிந்த நன்னன் போல,
வரையா நிரையத்துச் செல்இயரோ அன்னன்” (குறு – 292)
                என்று புனையப்பட்ட இக்கூற்றின் வழி பெண்கொலை புரிந்த நன்னன் அடையக் கூடிய அத்தகையக் கொடிய நரகத்தை என் வேட்கையை தடை செய்த அன்னையும் அடைக என்ற தலைவியின் ஏமாற்றமும் அவலமும் கலந்த துன்ப உணர்வு மேலோங்கி நிற்கிறது.
பொய்யும் மெய்யும்
                பழந்தமிழர் மரபு வலுவாத வாழ்க்கையினர் என்ற கூற்று முற்றிலும் மெய்யாய் இருப்பின் தொல்காப்பியர்,
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்த காரண மென்ப” (தொல்பொருள் - 1089)
                என்பதான ஒரு நாற்பாலை யாத்திரார் ஆகையால் பழந்தமியுர்களவு வாழ்வில் பொய்த்தாலும் உண்டு என்பது மெய். தலைவனால் களவு மணம் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு தலைவி, தலைவன் நீண்ட நாள் வாராமைக் கண்டு இங்ஙனம் புலம்புகிறார்.
யாரும் இல்லை தானே கள்வன்
தான்அது பொய்ப்பின் யான்வென் செய்கோ” (குறு – 25)
                இப்பாவில் பொய் என்கின்ற வார்த்தைக்கு நிகரான பொருள் தலைவன் தன் செயலின்று பிழைத்தால் என்பதாகும். மனிதன் தான் பிழைப்பட்ட செயலுக்கு காரணம் கற்ப்பிக்கவே பொய் கூறுகிறான் என்று பொய் குறித்து உளவியல் அறிஞர்கள் கருத்துரைக்கின்றன. ஐய்யப்பட்ட தலைவி பொய் என்ற வார்த்தை வழி தம் மன உணர்வை வெளிப்படுத்துகிறார். முன் குறித்த தலைவியை விட சற்று மிகுதியான காம நோய் கொண்ட தலைவி, தலைவன் பிரிவால் (வரைவிடை வைத்த பிரிவு) பசலை கண்டு உடல் மெலிவுற்று வருந்துகிறார். அஞ்ஞான்றும் கூட தலைவனைக் குறித்து தலைவி,
குன்ற நாடன்கேண்மை
மென்தோர் சாய்த்தும் சால்புஈன் என்றே” (குறு – 90)
                என்பதாக உரைக்கிறார். அஃதாவது அற்தோயுற்றே மெலிந்து போதும் தலைவனின் சால்பின் மேல் கொண்ட உறுதி நங்கப் பெறவில்லை என்ற கூற்றின் வழி தலைவனின் பிரிவைக் கூட பொய் என்பதான பிழையாக கருதமால் மெய் என்பதான நிறைவுடைமையாக கருதுகிறார். இவ்விரண்டு ஃபிராய்டின் மன எழுச்சி என்பதான துய்ப்பு மனநிலைக்குள் பொருந்துகிறது.
குணங்களை துறந்த மனம்
                பெண்ணிற்கே உரியதான சில குணங்களை தொல்காப்பியர்,
அச்சமு நாணு மடணுமுள் துறந்த
நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப” (தொல் பொருள் - 1043)
                என்பதாக பட்டியலிடுகிறார். ஆனால் குறுந்தொகை ஒரு குறிஞ்சித் தலைவி, தலைவன்பால் கொண்ட மிகுதியான காம வேட்கையால் தன் ஞானத்தை இழந்ததாக வாயுறுரைக்கிறாள்.
நடுநாள் வருதலும் வரூஉம்
வடுநா ணலமே தோழி! நாமே” (குறு – 88)
                தலைவன்பால் தலைவி கொண்ட அன்பினைப் பற்றி ஊரார் பழி தூற்றினும் அதற்கு நான் நானேன் (நாணலயே) என்று உரைக்கும் தலைவின் கூற்று வழி தலைவனைக் கண்ட போதே அச்சம் தொலைந்தது என்று வெளிப்படும் அவளது மன உணர்வின் வழி அகம்என்ற நிலையில் பெண்களுக்கான குணங்கள் சிறிது மரபில் இருந்து வலுவயுள்ளது என்பது புலனாகிறது.
                பெண்டியர் தமக்கே உரிய குணங்களான அச்சம், மடம், நாணம் ஆகியவற்றை இழக்கத் துணிந்தார் எணின் அஃது களவில் தன்னை மறந்த நிலைஎன்பதான மிகப் பொருத்தமான களவின் இலக்கணத்தைத் திருநாவுக்கரசர் இப்படி உரைக்கிறார்.
அகன்றால் அகல்இடத்தார் ஆசா ரத்தை
தன்மை மறந்தால் தன் நாமம் கெட்டால்”(திருநாவுக்கரசர் தேவாரம்)
                இக்கூற்று சங்க அகக்கூற்றுக்களை விட காலத்தால் பிற்பட்டது எனினும் அகக் கூற்றுக்களோடு ஒருங்கு வைத்து எண்ணத் தகுந்தது. அங்ஙனமே குறுந்தொகைத் தலைவியின் மன உணர்வுகளோடு மிக நெருங்கியே தொடர்புடையது.
முடிவுரை
                குறுந்தொகை குறிஞ்சி அகமாந்தர்களின் மனத்தை தொல்காப்பிய அக மரபுகள், ப்ஃராய்டிய திறவுகோல் கொண்டு திறக்கத் துணிந்தால் ஒன்றுக்கொண்டு முரண்பட்ட எண்ண அலைகளையும் (ஒரே உணர்வின் கீழ் பிணைக்கப்பட்டது) தமிழ் அகரமரபிலிருந்து சற்று மீறிய நிலைப்பாட்டையும் பெரும்பான்மையாக காண முடிகிறது என்பதே இக்கட்டு ஆய்ந்து கண்ட முடிவு.


……………………………………………